Tuesday, October 6, 2015

பழமுதிர்ச்சோலை - ஆறாவது படை வீடு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஆறாவது  படை வீடாகத் திகழ்வது பழமுதிர்ச்சோலை.  "சோலைமலை" என்ற பெயரும் இதற்கு உண்டு. இங்குள்ள முருகன் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை" என்று பொருள் .

இவ்விடத்திற்கு மாலிருங்குன்றம், இருங்குன்றம், திருமாலிருஞ் சோலை, அழகர் மலை என்ற பெயர்களும் வழங்கப் படுகின்றன.



அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்தத் தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஔவையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாகச் சொல்கிறார்கள்.


தனது புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகன், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார். அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் செய்திருந்ததால் அவருக்குக் களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது.

அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார். உடனே அந்தச் சிறுவனிடம், "குழந்தாய்... எனக்குப் பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களைப் பறித்துத் தர முடியுமா?" என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார்.

சிறுவனின் கேள்வி அவ்வைக்குப் புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப் பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக "சுடாத பழத்தையே கொடுப்பா..." என்று கேட்டுக் கொண்டார்."சுடாத பழம் வேண்டுமா? சரி உலுக்கி விடுகிறேன் சுடாத பழமா பார்த்து எடுத்துக்கோ" என்று கூறி,நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப் பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்தப் பழங்களைப் பொறுக்கிய அவ்வை, அந்தப் பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா?" என்று கேட்டார்.

சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்து போனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்தச் சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார். மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.

இந்தத் திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.



பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்தத் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். மலை உச்சியில் இந்த தீர்த்தத் தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது.

அமைவிடம்

மதுரை மாநகரில் இருந்து வடக்கே 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில் இந்த பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்குச் செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது. காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்குப் பயணமாகலாம். சுமார் 15 நிமிடங்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலையில் மெதுவாக பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கு பழமுதிர்ச்சோலை என்கிற சோலைமலை அமைந்துள்ளது.

திருவிழாக்கள்

இந்தக் கோயிலில் கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூசைகளும், அபிசேகங்களும் நடைபெறுகின்றன.




Wednesday, September 9, 2015

திருத்தணி முருகன் கோயில் தல வரலாறு

 அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திருத்தணி

முருகப்பெருமான் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படைவீடாகத் திகழ்வது திருத்தணிகைத் திருத்தலமாகும். 
முருகப்பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபத்மாவுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் முடிந்து, கோபம் தணிந்து, அமர்ந்த தலம் ஆதலின் இதற்குத் "தணிகை"  எனப் பெயரமைந்தது.
தேவர்களின் அச்சம் தணிந்த இடம், முனிவர்களின் காம,  வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை, ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும், இதற்குத் தணிகை என்று பெயரமைந்தது. 




திருத்தணி

ஆண்டின் 365 நாட்களையும் குறிக்கும்படியாக 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில்.

அருணகிரிநாதர், 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தலத்தினைப் பெரிதும் போற்றித் துதித்துள்ளார்.  கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில், மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில்கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சிபுரம் போலவும், மலைகளிலெல்லாம், சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே எனவும், உலகில் மலைகள் பல இருப்பினும், சிவபெருமான் கயிலாய மலையினை காதலித்தது போல, முருகன் திருத்தணிகை மலையினை பெரிதும் விரும்பி, அங்கு மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கிறான் எனவும் இதனைச் சிறப்பித்து பாடியுள்ளார்.

திருத்தணிகை முருகன் திருக்கோயில், மிகவும் தொன்மை வாய்ந்தது.  இங்கே அபிராஜிதவர்மன் (கி. பி. 875 -893) என்னும், பல்லவ மன்னனின் கல்வெட்டும், முதலாம் பராந்தகச் சோழன் (கி. பி. 907 -953 ) காலத்துக் கல்வெட்டும் காணப்படுவதனால், இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே, இத்தலம் பல்லவர் சோழர் முதலிய தமிழ்நாட்டுப் பேரரர்சர்களால் போற்றப்படும் பெருமை பெற்றிருந்த செய்தி தெளிவுறத் தெரிகிறது. 


அமைவிடம்
சென்னையிலிருந்து 53 கி. மீ., தொலைவில் ஆந்திர மாநில எல்லைக்கு அருகே திருத்தணி அமைந்துள்ளது. திருத்தணி செல்ல பேருந்து மற்றும் தொடருந்து வசதிகள் உள்ளது.



திருவிழாக்கள்

 முருகன் ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்ததால் இத்திருக்கோயிலின் ஆடிக்கிருத்திகை பெருவிழா முக்கிய திருவிழாவாக நடத்தப்படுகிறது. இத்திருவிழாவிற்கு கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சுமார் 5இலட்சம் பக்தர்கள் மலர்காவடி, பால்காவடி போன்றவற்றை சுமந்தும், தலைமுடிகளை காணிக்கை செலுத்தியும் முருகனை தரிசித்து தங்கள் பிராத்தனைகளை நிறைவேற்றி செல்கின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31  மற்றும் ஜனவரி 1 -ல் நடைபெறும் திருப்புகழ் திருப்படித்திருவிழா சுமார் 1 லட்சம் பக்தர்கள் வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர்.

திருவிழா விவரங்கள்
1. ஆங்கில புத்தாண்டு
ஜனவரி
2. தை பூசம்
ஜனவரி
3. மாசிப்பிரம்மோற்சவம்
பிப்ரவரி
4 . தவன உற்சவம் (3 நாட்கள்)
பிப்ரவரி, மார்ச்
5. மஹா சிவராத்திரி (1008   சங்காபிஷேகம் )
மார்ச்
6 . சித்திரை பிரம்மோற்சவம்
ஏப்ரல்
7 . 1008  பால்குட திருவிழா
ஏப்ரல்
8. வசந்த உற்சவம் (5 நாட்கள்)
ஜூன்
9. ஆடிக்கிருத்திகை
ஜூலை, ஆகஸ்டு
10. ஆடிப்பூரம்
ஆகஸ்டு
11. நவராத்திரி
செப்டம்பர், அக்டோபர்
12 . கந்த சஷ்டி, இலட்சார்ச்சனை திருவிழா
அக்டோபர், நவம்பர்
13 . கார்த்திகை கிருத்திகை (தீபத்திருவிழா )
நவம்பர், டிசம்பர்
14 . திருபுகழ் திருப்படித்திருவிழா
டிசம்பர் 31

Wednesday, March 18, 2015

சுவாமிமலை சுவாமிநாதன் கோயில் தல வரலாறு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. இத்தலத்தில் உறையும் கதிர்வேலன், தனது தந்தை சிவபெருமானுக்கு குருவாக இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இங்கு வீற்றிருக்கும் முருகப் பெருமானை சுவாமிநாதன், தகப்பன் சுவாமி என்றெல்லாம் அழைக்கிறோம். இதன் காரணமாகவே இந்தத் திருத்தலமும் சுவாமிமலை என்று அழைக்கப்படலாயிற்று.



சுவாமிமலை



அமைவிடம் :

தஞ்சை மாவட்டம் தஞ்சாவூர் நகரிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் அமைந்திருப்பது சுவாமி மலை. இந்து அறநிலைய ஆட்சித்துறைக்கு உட்பட்ட இந்தக் கோயிலில், திருமண மண்டபங்களும் வசதியான தங்கும் விடுதிகளும் உள்ளன. குடும்பத்தோடு வரும் பக்தர்கள் தங்கிக் கொள்ள தேவஸ்தானம் சார்பில் ஏராளமான குடில்களும் உள்ளன.

சோழ நாட்டையே ஒரு சிவத்தலமாகப் பாவித்து வழிபடும் முறை உண்டு. அந்த வகையில் திருவலஞ்சுழியை விநாயகர் சன்னதியாகவும், சுவாமிமலையை முருகன் சன்னதியாகவும் கொள்வர்.

சுவாமிமலை  தல வரலாறு:


இத்தலத்தை முருகனின் சிறப்புமிக்க அழகிய படைவீடு என்ற பொருளில் (ஏர்+அகம்) ஏரகம் என்றனர். ஏர்த் தொழிலான விவசாயத்தில் சிறந்த பகுதியில் உள்ள அகம் என்ற பொருளையும் எடுத்துக் கொள்ளலாம்.

இக்கோயிலின் தல வரலாறு சுவாமிமலையில் சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

பிரணவ உபதேசம் கேட்ட சிவபெருமான் :

படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன், முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று முருகப் பெருமான் கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரைத் தலையில் குட்டிச் சிறையில் அடைத்தார் முருகன்.

ஈசனே நேரில் வந்து கேட்டுக் கொண்டதால், பிரம்மனை முருகன் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், "பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?" என்று முருகனிடம் கேட்டார். "ஓ நன்றாகத் தெரியுமே" என்றார் முருகன். "அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?" என்றார் ஈசன். "உரிய முறையில் கேட்டால் சொல்வேன்!" என்றார் முருகன்.

அதன்படி சிவபெருமான் இத்தலத்தில் சிஷ்ய பாவத்தில் அமர்ந்து, முருகனிடம் பிரணவ உபதேசம் கேட்டார். அன்று முதல், சுவாமியாகிய சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனார். அதனால் முருகன், சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன் சுவாமி என்றும் போற்றப்பட்டார். இந்தத் திருத்தலமும் சுவாமிமலை என்று அழைக்கப்பட்டது.

நான்கரை அடி உயர சுவாமிநாதன் :

ஞானாசிரியராகிய சுவாமிநாதன் கம்பீரமாக நான்கரை அடி உயரமுள்ள திருவுருவத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வலக்கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடக்கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்கக் கருணாமூர்த்தியாகக் காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதைக் கண்குளிரக் காணலாம்.

மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, இரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி அடியவர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம்.

நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் "தாத்ரி" என்பர். அதனால் சுவாமிமலையை "தாத்ரிகிரி" என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை "ஞானஸ்கந்தன்" என்று போற்றுகின்றனர்.

முருகனை போற்றிப் பாடல்கள் :

அருணகிரிநாதர் முப்பத்தெட்டு திருப்புகழ்ப் பாடல்களை சுவாமிநாதனுக்குச் சூட்டியுள்ளார். சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். "ஒருதரம் சரவணபவா..." என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது.

அவ்வாறே, சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, "சுவாமிநாத பரிபாலயாதுமாம்" என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.

மாடக்கோயில் :

சுவாமிமலை இயற்கையான மலை அன்று. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோயில்தான் சுவாமிமலை. மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கில் கருங்கற் கோயில்கள் இருப்பது பிரமிப்பூட்டும் விந்தைகளில் ஒன்றாகும்.

இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதற் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.

தெற்கு நோக்கிய இராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே திருக்கோயிலுக்குள் நுழைகின்றனர். ஏனெனில், நுழைந்தவுடன் வல்லப கணபதியின் தரிசனம் கிடைக்கிறது.

மலைக்கோயிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமையப் பெற்றுள்ளன. சுவாமிநாதனைக் காண நாம் அறுபது படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் அறுபது படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.

மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் "கண் கொடுத்த கணபதி" என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை அருளி வருகிறார்.


திருவிழாக்கள் விவரம் : 

இங்கு முக்கிய திருவிழாவாக திருக்கார்த்திகை திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. பிற விழாக்கள் : சித்திரையில் 10 நாள் பிரம்மோற்சவம், வைகாசி விசாகப் பெருவிழா, ஆவணி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம், புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பெருவிழா, ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விழா, மார்கழியில் திருவாதிரைத் திருநாள், தை மாதத்தில் தைப்பூசப் பெருவிழா, பங்குனியில் வள்ளி திருக்கல்யாணம் ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.



செல்லும் வழி :
கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்கு அடிக்கடி பேருந்து போக்குவரத்து வசதி உள்ளதால் கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்றடையலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம் :

சுவாமிமலை, கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம் : 
திருச்சி









Friday, February 13, 2015

Lord Murugan back to Back Tamil Devotional Songs

Lord Murugan Tamil Devotional Songs Enjoy back to Back devotional songs in praise of Lord Muruga including K. B. Sundarambal's Pazham Neeyappa and many other classic songs.

Select your favorite track from the Menu or shuffle between the songs. Have a blessed Time!






முருகனின் ஆறுபடை வீடுகள்

Thursday, December 4, 2014

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் தல வரலாறு

திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற இந்துக் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும்.

திருச்செந்தூர்

தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது.

முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோயிலே ஆகும். இக்கோயில் கடற்கரையில் இருக்கும் "சந்தனமலை'யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.





தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது.


தொல்காப்பியம்

முருகன் தீம்புனல் அலைவாய் - தொல்காப்பியம் (களவு சூத்23)


புறநானூறு

வெண்டலைப் புனரி யலைக்குஞ் செந்தில்
நெடுவேல் நிலைஇய காமர் வியன்துறை (பாடல் 55)


அகநானூறு

திருமணி விளக்கினலை வாய்ச்செரு மிகுசேஎய் (பாடல் 266)


திருமுருகாற்றுப்படை

உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்


சிலப்பதிகாரம்

சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்


தேவாரப் பதிகம்

நஞ்செந்தில் மேய வள்ளிமணாளற்குத் தாதை கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே


அருணகிரிநாதர் பாடல்

இக்கோயில் குறித்தும், முருகப்பெருமான் குறித்தும் அருணகிரிநாதரின் பாடல் இது.

அந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக் கார அண்டரூப கார சேவற் கார முடிமேலே -
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் காரகுன்றுருவ ஏவும் வேலைக் காரஅந்தம்வெகு வான ரூபக் கார எழிலான;
சிந்துரமின் மேவு போகக் காரவிந்தைகுற மாது வேளைக் காரசெஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான -
செஞ்சமரை மாயு மாயக் காரதுங்கரண சூர சூறைக் கார செந்திநகர் வாழு மாண்மைக் கார பெருமாளே.

Wednesday, May 7, 2014

Pazhani Murugan Temple

Friday, January 31, 2014

‎திருப்பரங்குன்றம் முருகன் கோவில் - தல வரலாறு

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ள இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

திருப்பரங்குன்றம்


‎திருப்பரங்குன்றம் முருகன் கோவில் - தல வரலாறு  


கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவி க்கு ஒம் எனும் பிரணவ(பரம்பொருளே எனும் பொருளுடைய) மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார்.புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.
முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தினையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.
இந்நிலையில் சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவபெருமான் - பார்வதி தேவி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள்.இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. எனவே திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.
முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் -தெய்வானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.


பெயர்க்காரணம்

பரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம்.திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று.
இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.


சங்க இலக்கியங்களில்

அகநானூற்றில் இந்த மலை முருகன் குன்றம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் திருமுருகாற்றுபடை, கலித்தொகை, மதுரை காஞ்சி, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.


சிறப்புகள்

முருகப் பெருமானின் அறுபடை வீட்டு கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும்.
லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர்.
சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்ட திருத்தலம்.


பயண வசதி

தமிழ்நாட்டின் மதுரை நகரிலிருந்து தென்மேற்கில் தேசிய நெடுஞ்சாலை வழியே 9 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு நகரப் பேருந்துகள் அதிக அளவில் செல்கிறது.
மதுரையிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லும் ரயில் பாதையில் திருப்பரங்குன்றத்தின் ரயில் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
Code by : paid web directory