பழநி தல வரலாறு:
முருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோயில் முன்றாவது படை வீடு ஆகும். இந்தக் கோயில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் தலத்தின் மூலவர் நவபாஷானத்தால் ஆனவர். போகர் என்ற சித்தர், இந்தத் தலத்தின் மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளார். உற்சவர் முத்துகுமாரசாமி. இந்த கோவிலில்தான் தமிழகத்தில் முதன்முதலாக பக்தர்கள் வேண்டுதல்கள் நிமித்தம் அலகு குத்துதல், காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
நாரதர் கொடுத்த கனியை, தனக்கு தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி இத்தலம் வந்தார். சமாதானம் செய்ய, அம்பிகை பின்தொடர்ந்து வந்தாள். சிவனும் அவளை பின்தொடர்ந்தார். முருகன் இத்தலத்தில் நின்றார். அம்பிகை, இங்கு மகனை சமாதானம் செய்தாள். ஆனாலும் முருகன் விடாப்பிடியாக இங்கேயே இருக்க விரும்புவதாகச் சொல்லி தங்கிவிட்டார். பிற்காலத்தில் இவ்விடத்தில் முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி குழந்தை வடிவமாக நின்றதால், "குழந்தை வேலாயுதர்' என்று பெயர் பெற்றார்.பழத்தின் காரணமாக முருகன் கோபித்து வந்தபோது, அவரைக் கண்ட அவ்வையார், "பழம் நீ' (நீயே ஞானவடிவானவன்) என்று ஆறுதல் வார்த்தைகள் சொன்னார். இப்பெயரே பிற்காலத்தில், "பழநி' என மருவியது.
மூன்றாம் படை வீடு: முருகன் முதலில் கோபித்து வந்து நின்ற தலம் என்பதால், மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி தலமே "மூன்றாம் படை வீடு' ஆகும். இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. இவர் சிவனின் அம்சம் என்பதால் இவரது கருவறை சுற்றுச்சுவரில் (கோஷ்டம்) தெட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர்.பழநிக்கு செல்பவர்கள் முதலில் இங்கிருந்து 4 கி.மீ., தூரத்திலுள்ள பெரியாவுடையாரை தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோயிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.
பழனி முருகன் கோயில்:
மூலவர் :
திருஆவினன்குடி -
குழந்தை வேலாயுதர்.
மலைக்கோயில் -
தண்டாயுதபாணி, நவபாஷாண மூர்த்தி.
தல விருட்சம் : நெல்லி மரம்
தீர்த்தம் : சண்முக நதி
ஆகமம் : சிவாகமம்.
புராணப் பெயர் : திருஆவினன் குடி.
ஊர் : பழனி
மாவட்டம்: திண்டுக்கல்
மாநிலம் : தமிழ்நாடு
முகவரி : அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், பழனி 624601. திண்டுக்கல் மாவட்டம்.
தொலைபேசி: 04545-242293, 242236, 242493.