Thursday, December 4, 2014

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் தல வரலாறு

திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற இந்துக் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும்.

திருச்செந்தூர்

தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது.

முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோயிலே ஆகும். இக்கோயில் கடற்கரையில் இருக்கும் "சந்தனமலை'யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.





தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது.


தொல்காப்பியம்

முருகன் தீம்புனல் அலைவாய் - தொல்காப்பியம் (களவு சூத்23)


புறநானூறு

வெண்டலைப் புனரி யலைக்குஞ் செந்தில்
நெடுவேல் நிலைஇய காமர் வியன்துறை (பாடல் 55)


அகநானூறு

திருமணி விளக்கினலை வாய்ச்செரு மிகுசேஎய் (பாடல் 266)


திருமுருகாற்றுப்படை

உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்


சிலப்பதிகாரம்

சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்


தேவாரப் பதிகம்

நஞ்செந்தில் மேய வள்ளிமணாளற்குத் தாதை கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே


அருணகிரிநாதர் பாடல்

இக்கோயில் குறித்தும், முருகப்பெருமான் குறித்தும் அருணகிரிநாதரின் பாடல் இது.

அந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக் கார அண்டரூப கார சேவற் கார முடிமேலே -
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் காரகுன்றுருவ ஏவும் வேலைக் காரஅந்தம்வெகு வான ரூபக் கார எழிலான;
சிந்துரமின் மேவு போகக் காரவிந்தைகுற மாது வேளைக் காரசெஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான -
செஞ்சமரை மாயு மாயக் காரதுங்கரண சூர சூறைக் கார செந்திநகர் வாழு மாண்மைக் கார பெருமாளே.
Code by : paid web directory